Published : 28 Jun 2020 07:12 AM
Last Updated : 28 Jun 2020 07:12 AM

அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல்: இந்திய வம்சாவளியினரின் ஆதரவுக்கு ட்ரம்ப் நன்றி

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில், தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் தற்போது அதிபராக பதவி வகிக்கிறார். இவர், நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கு அமெரிக்காவின் பல மாகாணங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரமும் செய்து வருகிறார்.

இந்நிலையில், ‘ட்ரம்ப் விக்டரி இந்தியன்-அமெரிக்கன் பைனான்ஸ் கமிட்டி’யின் துணை தலைவர் அல் மேசன், ட்ரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினரை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடத்திய ஆய்வில், அமெரிக்காவின் பல முக்கிய மாகாணங்களில், இந்திய வம்சாவளியினர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்குதான், இந்திய வம்சாவளி மக்கள் பெரும்பாலும்ஆதரவளிப்பார்கள். தற்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப்புக்கு அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவளிக்க முன்வந்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை துணை செயலாளர் சாரா மேத்யூஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சாரா நேற்று கூறியதாவது:

அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிரச்சாரத்தின் போது லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் ட்ரம்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர். அதற்காக அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாகமிச்சிகன், புளோரிடா, டெக்சாஸ், பென்சில்வேனியா, வெர்ஜினியா போன்ற மாகாணங்களில் ட்ரம்ப்புக்கு இந்திய வம்சாவளியினரிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. அதைப் பார்த்து அதிபர் ட்ரம்ப் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டு பதவியில் இந்திய வம்சாவளியினரின் அன்பை பெறுவதற்கு அதிபர் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹூஸ்டன் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அந்தகூட்டங்கள், இந்திய வம்சாவளியினருடன் ட்ரம்ப் நெருக்கமாவதற்கு காரணங்களாக அமைந்தன.

அமெரிக்க பொருளாதாரம், கலாச்சார மேம்பாடு ஆகியவற்றில் இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். அதை அதிபர் ட்ரம்ப் அங்கீகரித்துள்ளார். அமெரிக்க மக்கள் அனைவருக்கும் நல்வாழ்க்கை, சுகாதாரம், சுதந்திரம் ஆகியவை கிடைக்க ட்ரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார். இவ்வாறு சாரா கூறினார்.

அல் மேசன் கூறும்போது, ‘‘இந்தியாவுடன் அதிபர் ட்ரம்ப் ஏற்படுத்திஉள்ள மிக நெருங்கிய நட்பால், இந்திய வம்சாவளியினரின் ஆதரவுபெருகியுள்ளது. ட்ரம்ப் மனைவி மெலினா, மகள் இவாங்கா மற்றும் மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் இந்தியா மற்றும் இந்தியர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர்’’ என்றார்.

அமெரிக்காவின் மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்த மாகாணங்களில் மக்கள்பிரதிநிதிகள் உள்ளனர். ‘எலெக்டர்கள்’ என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்தப் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புதான் தேர்தல் அவை எனப்படுகிறது. அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அளித்தாலும் எலெக்டர்களின் வாக்குகளை பொறுத்தே ஒருவர் அதிபராக முடியும். அந்த வகையில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு பல மாகாணங்களில் செல்வாக்குக் கூடியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x