

காஷ்மீர் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்குமாறு இந்தியா அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது அவசியம் என்ற அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் குறித்த இவரது கருத்துக்களுக்கு இந்து அமெரிக்கர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஜோ பிடனின் கொள்கை ஆவணத்தில் ஜோ பிடனின் முஸ்லிம் அமெரிக்கர்களுக்கான திட்டத்தில் அவர் கூறும்போது, சிஏஏ, என்.ஆர்.சி. போன்ற நடைமுறைகள் மிக நீண்ட மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட பல மதங்கள், பன்மைத்துவம் கொண்ட ஒரு ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பொருத்தமற்றதாக உள்ளது.
“காஷ்மீரில் அனைத்து மக்களுக்கான உரிமை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எதிர்ப்பை முடக்குவது, அமைதிப் போராட்டங்களுக்குத் தடை விதிப்பது காஷ்மீரில் இணையதளத்தை முடக்குவது அல்லது அதன் வேகத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்” என்று அவரது முஸ்லிம் அமெரிக்கர்களுக்கான கொள்கை ஆவணம் தெரிவிக்கிறது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஜோ பிடன் அஸாமில் அமல்படுத்தப்பட்ட என்.ஆர்.சி.க்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் , மற்றும் சிஏஏ அமல்படுத்தப்பட்ட பிறகான நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பிடன் இந்தியாவின் சிறந்த நண்பர், இந்திய-அமெரிக்க மக்களின் சிறந்த நண்பராக அறியப்பட்டவர்.
இந்திய-அமெரிக்க சிவிலியன் அணு ஒப்பந்தம் கையெழுத்தாக உறுதுணையாக இருந்தவர் ஜோ பிடன் என்பது குறிப்பிடத்தக்கது.