

சீனாவில் புதிதாக 13 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறும்போது, “ சீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 பேர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், பரிசோதனை எண்ணிக்கை அரசு அதிகப்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்த சில வாரங்களில் கரோனா வைரஸ் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பரவியது. அதன் பிறகான நாட்களில் சீன அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது. கடந்த இரு மாதங்களாக அங்கு வைரஸ் தொற்று முற்றிலும் குறைந்து இருந்தது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 12 தினங்களில் 249 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பெய்ஜிங்கில் உள்ள ஷின்ஃபாடி உணவுச் சந்தையிலிருந்து கரோனா தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது, கடந்த இருமாதங்களாக பெய்ஜிங்கில் புதிதாக தொற்று உறுதியப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று ஏற்படுப்பட்டுள்ளது.
இதனால் பரிசோதனை எண்ணிக்கையை அந்நகர அரசு அதிகப்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டு இருப்பது இரண்டாம் கட்ட பரவலாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இதுவரை 83, 462 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 78,439 பேர் குணமடைந்துள்ளனர்.