

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான், பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என்று வர்ணித்தார். மேலும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாகிஸ்தான் பங்கேற்றிருக்கக் கூடாது என்று பேசியுள்ளமை அங்கு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இம்ரான் கான் மேலும் கூறிய போது, அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை கொன்றது, அரசுக்கு இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் பிறகுதான் பாகிஸ்தானை அனைவரும் எதிர்மறையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதன் மூலம் நாடு தர்மசங்கடத்துக்கு ஆளானதுதான் மிச்சம்.
அமெரிக்கப் படையினரின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் 70,000 பாகிஸ்தானியர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்றிருக்கவே கூடாது, என்று இம்ரான் பேசியுள்ளார்.
இது அங்கு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
ஒசாமா பின் லேடன் அபோத்தாபாத்தில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டு அவரது உடல் கடலில் வீசப்பட்டது பாகிஸ்தானில் பெரிய ஆர்ப்பாட்டங்களை கிளப்பியது, அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க கொடியை எரித்ததும் நடந்தது.
அப்போது முதல் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாகிஸ்தான் பங்கேற்கக் கூடாது என்று பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர், அவர்களின் உணர்வைத்தான் தற்போது இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் போக நெட்டிசன்கள் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.