பாகிஸ்தான் தலைநகரில் முதல் கிருஷ்ணர் கோயில்

பாகிஸ்தான் தலைநகரில் முதல் கிருஷ்ணர் கோயில்
Updated on
1 min read

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடியில் கிருஷ்ணர் கோயில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் அமையும் முதல் இந்து கோயில் என்ற பெருமையை இது பெறுகிறது. எச்-9 என்ற பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி மனையில் கோயில் கட்டப்படுகிறது. மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற செயலர் லால் சந்த் மால்ஹி நேற்று முன்தினம் கோயில் கட்டுமானப் பணி தொடங்க அடிக்கல் நட்டு பூமி பூஜை நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான இந்து கோயில்கள் இருந்தன. கோயிலுக்குச் சென்று வழிபட ஆளில்லாமல் போய் காலப் போக்கில் அவை கைவிடப்பட்டன. கடந்த 20 ஆ ண்டுகளில் இஸ்லாமாபாத்தில் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்கள் வழிபட கோயில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை 'தி டான்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

மத விவகாரத் துறை அமைச்சர் பீர் நூருல் கூறும்போது, ‘‘இந்த கோயில் கட்ட ரூ.10 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தொகையை அரசே ஏற்கும்’’ என்று தெரிவித்தார். கோயில் கட்டுவதற்கு சிறப்பு மானியம் ஒதுக்குமாறு கோரி மத விவகார அமைச்சகம். பிரதமர் இம்ரான் கானுடன் பேசியுள்ளதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்து அமைப்பினர் இந்த கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என பெயர் சூட்டியுள்ளனர். 2017-ம் ஆண்டிலேயே கோயில் கட்டுவதற்கு மனையை ஒதுக்கி உத்தரவிட்டது தலைநகர் மேம்பாட்டு ஆணையம். கட்டிட அனுமதி பெறுதல் போன்ற பல்வேறு நடைமுறைகள் காரணமாக கட்டுமானப் பணி தொடங்குவதில் தாமதமானது. கோயில் வளாகத்துக்குள் எரிமேடை உட்பட இந்து மதம் சார்ந்த இதர சடங்குகளுக்கான பிரிவுகளும் கட்டப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in