

97 பேரைப் பலி கொண்ட பாகிஸ்தான் பிஐஏ விமான விபத்தில் விமான ஓட்டியின் கவனக் குறைவு காரணமாகவே விபத்து நடந்ததாக விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மாதம் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது. இதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த விமான விபத்தில் 97 பேர் பலியாகினர்.
இதில் பிஐஏ விமான விபத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்பட்டு வந்தது. விமானத்தில் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விபத்து தொடர்பாக நடந்த விசாரணையின் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், “விமான ஓட்டியும், விமானக் கட்டுப்பாட்டாளரும் வழக்கமான விதிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் இருவரும் விமானத்தைக் கவனிக்காமல் கரோனா வைரஸ் குறித்தே உரையாடிக் கொண்டிருந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. நூறு சதவீதம் பறப்பதற்குத் தகுதியான விமானம்தான் அது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டது.