

தாவரங்களுக்கு மத்தியில் ஸ்பெயினில் நடந்த இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கரோனா வைரஸ் உலகின் இயல்பு வாழ்க்கையையே திருப்பிப் போட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓவ்வொரு நாளும் புதிய புதிய அணுகுமுறையில் உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் உள்ள ஒபரா இசை அரங்கில் 2000க்கும் அதிகமான தாவரங்களுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சியை இசைக் கலைஞர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட தாவரங்கள் அனைத்தும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று இந்த இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.
பார்வையாளர்கள் இல்லாமல் தாவரங்கள் இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மார்ச் மாதத்தில் கரோனா வைரஸால் ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது.
ஸ்பெயினில் இதுவரை 2,46,272 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,323 பேர் பலியாகியுள்ளனர்.