

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “மெக்சிகோவின் தென்பகுதியில் ஓக்ஸாக்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்துக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவில் சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக மெக்சிகோ பேரிடர் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான வின்சென்ட் ரோமிரோ கூறும்போது, “ஒரு நொடியில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்பகுதியிலிருந்த கடைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன” என்று தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மெக்சிகோவில் இரு வாரத்தில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.