

இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்கக் குடியுரிமைக்கான கிரீன் கார்டுகளை வழங்க வேண்டாம் என்று தடை உத்தரவு பிறப்பித்ததை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
இதற்கான செயல் உத்தரவை ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் பிறப்பித்த போது 90 நாட்களுக்குத்தான் மேற்கொண்டார். ஆனால் திங்களன்று புதிய உத்தரவில் டிசம்பர் 31, 2020 வரை நீட்டித்தார்.
இதற்கானக் காரணத்தை அவர் நியாயப்படுத்தும் போது, “ஏனெனில் நாங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைகளை அளிக்க வேண்டியுள்ளது, இப்போது இதற்குத்தான் முன்னுரிமை.
நாட்டில் ஒட்டுமொத்தமாக வேலையின்மை விகிதம் பிப்ரவரி முதல் மே 2020 வரை 4 மடங்காக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் இதுவரை பதிவாகாக வேலையின்மை நிலவரமாகும், ஆகவே அமெரிக்கர்களுக்கு வேலை என்பதே இப்போதைய கவனம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தலை எதிர்கொள்கிறார். தான் மீண்டும் அதிபராவது அவசியம் என்று அவர் பேசி வருகிறார்,
ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது மே மாதத்தில் வேலையின்மை விகிதம் 13.3% ஆக குறைந்துள்ளது, ஆனாலும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இன்னமும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தான் உள்ளனர்.
தற்போது இந்த கிரீன் கார்டு இடைநிறுத்தத்தினால் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிஐ பெறுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும், ஏற்கெனவே பலருக்கும் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா 1 லட்சத்து 40,000 கிரீன் கார்டுகளை வழங்கி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் அயல்நாட்டினருக்கும் அவர்களது குடும்பத்துக்கும் கிரீன் கார்டு இல்லை. இந்த விண்ணப்பதாரர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர், ஆனால் இன்னும் பணி கிரீன் கார்டுகளை பெறவில்லை.
ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் கிரீன் கார்டு அளிப்பதில் நாடு வாரியாக உச்ச வரம்பு உள்ளது. இப்போது இந்த உத்தரவினால் மேலும் இந்தியர்களும், சீனர்களும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.