

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், பரிசோதனை எண்ணிக்கை அரசு அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான கடந்த 12 நாட்களில் 29.5 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையை மேலும் துரிதப்படுத்த இருப்பதாக பெய்ஜிங் நகராட்சியின் சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் ஜாங் ஹூவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாங் ஹூவா கூறும்போது, ‘கரோனா தொற்று ஏற்பட சாத்தியம் மிகுந்த பகுதிகளில் அதிக அளவில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். 2 கோடி மக்கள் தொகை கொண்ட பெய்ஜிங்கில் இதுவரையில் 29.5 லட்சம் பேருக்கு சோதனை செய்துள்ளோம். உணவு விடுதிகளில், சந்தைகளில் அங்காடிகளில் வேலை செய்யும் பணியாளர்களை முதன்மையாக சோதித்து வருகிறோம். கடந்த மார்ச் மாதத்தில் தினமும் 40,000 அளவில் பரிசோதனைகள் மேற்கொண்டோம். ஆனால் தற்போது தினமும் 3 லட்சம் அளவில் பரிசோதனை செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.
சீனாவில் உள்ள வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்த சில வாரங்களில் கரோனா வைரஸ் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பரவியது. அதன் பிறகான நாட்களில் சீன அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது. கடந்த இரு மாதங்களாக அங்கு வைரஸ் தொற்று முற்றிலும் குறைந்து இருந்தது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 தினங்களில் 249 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி உணவுச் சந்தையிலிருந்து கரோனா தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது, கடந்த இருமாதங்களாக பெய்ஜிங்கில் புதிதாக தொற்று உறுதியப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று ஏற்படுப்பட்டுள்ளது.
இதனால் பரிசோதனை எண்ணிக்கையை அந்நகர அரசு அதிகப்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டு இருப்பது இரண்டாம் கட்ட பரவலாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.