

ஆபத்தான கட்டத்தில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்ட டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
இந்நிலையில் டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேர் மரணங்களைத் தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “ஸ்டெராய்ட் மாத்திரையான டெக்ஸாமெதாசோன் மாத்திரைகள் ஆபத்தான நிலையில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்று திறன் கொண்டுள்ளது. இம்மாத்திரை அதிகம் உற்பத்தி செய்து உலக முழுவதும் கொண்டு செல்வதே நமது அடுத்தக் கட்ட சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்றும், ஊரடங்குத் தளர்வுகளை உலக நாடுகள் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.