Last Updated : 23 Jun, 2020 09:44 AM

 

Published : 23 Jun 2020 09:44 AM
Last Updated : 23 Jun 2020 09:44 AM

ஒரே உத்தரவு: வெளிநாடுகளைச் சேர்ந்த 5.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பறிப்பு; தேர்தலில் வெல்ல காய்நகர்த்தும் ட்ரம்ப்

இந்த ஆண்டு இறுதிவரை வேலைக்கான ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை நிறுத்திவைத்து அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவால் அமெரிக்காவில் 5.25 லட்சம் வேலைவாய்ப்பு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைப்பது பறிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில், வெல்வதற்காக, உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற அதிபர் ட்ரம்ப் காய் நகர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரி்க்காவில் கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே என்ற கோஷம் முக்கியக் காரணமாக அமைந்திருந்தது.

ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு, வேலையி்ன்மை அதிகரித்துள்ள நிலையில், இயல்பாகவே அந்த கோஷத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருந்த ட்ரம்புக்கு தனது நிலைப்பாட்டை தேர்தல் நேரத்தில் வலுவாக்க பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

அமெரிக்க வேலைவாய்ப்பு அமெரி்க்க மக்களுக்கே என்ற கோஷத்துக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசாக்களை நிறுத்தி வைத்த அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுக்கும் மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த ஒரு உத்தரவின் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை அமெரிக்காவுக்குள் வேலைக்காக வர வேண்டிய 5.25 லட்சம் வெளிநாட்டினர் வருகை தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5.25 வேலைவாய்ப்புகள் உள்நாட்டைச் சேர்ந்த அமெரிக்க மக்களுக்கு போய்ச்சேரும் என்று ட்ரம்ப் நம்புகிறார்
குறிப்பாக இந்தியர்களுக்கு அதிகமாகப் பயனளிக்கும் ஹெச்-1பி விசா, எல்1 விசாக்கள் போன்றவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த ஹெச்-1பி விசா, எல்1 விசா, ஜே விசா, ஹெச்-2பி, ஹெச்-4பி விசா ஆகியவற்றை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதன் மூலம் அமெரிக்காவில் 5.25 லட்சம் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டினர் அபகரித்துக் கொள்வது தடுக்கப்படும். அவை உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு வருவதற்காகவே அதிபர் ட்ரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குடியேற்ற விதிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவே கருதுகிறோம். இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வேலைகிடைப்பது எளிதாகும். இந்த உத்தரவு தற்காலிகமானதுதான் நிரந்தரமானது அல்ல. அமெரிக்கவில் நிலைமை சீரடைந்தவுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

அதிகபட்சமாந ஊதியம் பெறும் ஹெச்-1பி விசாவில் வருவோர் அனுமதிக்கப்படுவார்கள். குறைவான ஊதியத்தில் வருவோருக்கு மட்டுமே தடை உத்தரவு பொருந்தும்.

இந்த உத்தரவின் நோக்கம் அமெரிக்க மக்கள் விரைவில் கரோனா வைரஸால் உருவான பொருளாதார மந்தநிலையிலிருந்து விடுபட வேண்டும், அமெரி்க்க மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் .

இனிவரும் காலங்களில் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுக்காமல், உள்நாட்டு மக்களை அதிகமாக வேலைக்கு எடுப்பார்கள், இதன் மூலம் உள்நாட்டில் வேலையின்மை குறைய வாய்ப்புள்ளது. இந்த உத்தரவைப் பிறப்பிக்காமல் இருந்திருந்தால், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளதையே காட்டுகின்றன” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x