

தென்கொரியா இரண்டாம் கட்ட கரோனா பரவலை எதிர்கொண்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று சீனாவிலிருந்து முதன் முதலாக தென் கொரியாவுக்குப் பரவிய நிலையில், அங்கு பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் முதற்கட்டப் பரவல் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு 900 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து முறையான பரிசோதனை மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் தலைவர் ஜியாங் கூறுகையில், ''இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணித்திருந்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யாகியுள்ளது. மே மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மக்கள் புழக்கம் அதிரிகத்தது. அதன் விளைவாக தற்போது இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது. மக்கள் புழக்கம் அதிகரிக்க அதிகரிக்க கரோனா தொற்று தொடர்ந்து நீடிக்கும்'' என்று தெரிவித்தார்.
தென்கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று 17 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக இதுவரையில் 12,438 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 280 பேர் பலியாகியுள்ளனர்.