

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சிங்கள வீரர்களை கொன்று குவித்தோம் என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் கருணா அம்மான் பேசியது குறித்து போலீஸார் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான் எனப்படுகிற விநாயக மூர்த்தி முரளிதரன். கடந்த 2004-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கிழக்கு மாகாண வீரர்களுடன் தளபதி கருணைா அம்மான் விலகியபின் அந்த அமைப்பு பலவீனமடைந்தது. அதன்பின் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஐக்கிய சுதந்திரா முன்னணி எனும் கட்சியைத் தொடங்கிய கருணா அம்மான் அதில் போட்டியிட்டு எம்.பி.யாகினார். அதன்பின் மகிந்தா ராஜபக்சேயின் இலங்கை சுதந்திரா கட்சியோடு கருணா அம்மான் கூட்டணியில் இணைந்தார்.
தற்போது கருணா அம்மான் கட்சி, ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சியோடு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கருணா அம்மான் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கும் நடாாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் இலங்கையில் வடக்குப்பகுதி நகரங்களில் கருணா அம்மான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் பேசிய கருணா அம்மான், “ நான் கரோனா வைரஸைவிட ஆபத்தானவன். கரோனா வைரஸால் இலங்கையில் இதுவரை 9 பேர்தான் இறந்துள்ளார்கள்.
ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் நான் இருந்தபோது, யானைப் பாதையில், ஓர் இரவுக்குள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இலங்கைராணுவ வீரர்களை நாங்கள் கொன்றிருக்கிறேன். கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான சிங்கள ராணுவத்தினரை கொன்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்
சமீபத்தில் கரத்தீவு உள்ளாட்சி அமைப்பின் தலைவர் கருணா அம்மானைப் பற்றிக் விமர்சிக்கையில், கரோனா வைரைஸக் காட்டிலும் கருணா அம்மான் ஆபத்தானவர் என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக இந்த கருத்தை கருணா அம்மான் பேசினார்.
கருணா அம்மான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு இலங்கையில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து, கருணா அம்மான் பேசியது குறித்து கிரிமினல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு போலீஸார் தலைவர் சந்தனா விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.
மேலும், கருணாவின் பேச்சுக்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான விஜயவர்த்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ கருணா அம்மானின் பேச்சை எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து விட முடியாது. அவர் பேசிய விவரம் குறித்து கிரிமினல் விசாரணை நடத்த வேண்டும். எப்போதும் தேசியவாதம் குறித்தும், இலங்கை மண் குறித்தும் பேசி, தேர்தல் வெற்றி பெற நினைக்கும் கருணா அம்மான் எவ்வாறு சிங்கள வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றதாகக்கூறுவார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்