அமெரிக்க கோழி இறைச்சிக்குத் தடை விதித்த சீனா

அமெரிக்க கோழி இறைச்சிக்குத் தடை விதித்த சீனா
Updated on
1 min read

பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் டைசன் உணவு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பலருக்கு சமீபத்தில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனத்திலிருந்து ஏற்றுமதியாகும் இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்காவின் டைசன் நிறுவனத்திடமிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாகத் தடை செய்கிறோம். மேலும் பெய்ஜிங்கில் செயல்பட்ட பெப்சி நிறுவனத்திற்குத் தடை விதிக்கிறோம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் உணவுப் பொருட்களிலிருந்து கரோனா வைரஸ் பரவுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று டைசன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை சுமார் 83,396 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 4,634 பேர் பலியாகியுள்ளனர். 78,413 பேர் குணமடைந்துள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா வைரஸ் பரவும் அச்சம் சூழ்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவை முடக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in