

சீனாவில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ சீனாவில் இன்று (திங்கட்கிழமை) 18 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள். மேலும் இதில் 7 பேருக்கு கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெய்ஜிங் நகரில் கரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நகர அரசு தீவிரமாக இறங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் இதுவரை சுமார் 83,396 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 4,634 பேர் பலியாகியுள்ளனர். 78,413பேர் குணமடைந்துள்ளனர்.
பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா வைரஸ் பரவும் அச்சம் சூழ்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவை முடக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், மக்களுக்குப் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ள சீன அரசு, இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனையை நடத்தியுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது.