

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று மாலை ஒரு பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்ட மக்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தீவிரவாதச் செயலோடு தொடர்புடையதா என்பது குறித்து பிரிட்டன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீடிங் நகரில் உள்ள ஃபோர்பரி பூங்காவில் நேற்று வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். அப்போது, கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சத்தமிட்டு, தான் வைத்திருந்த கத்தியால் கண்ணில் தென்பட்ட மக்கள் மீது குத்தத் தொடங்கினார்.
இதில் பூங்காவில் இருந்த பலர் கத்திக்குத்து வாங்கிய நிலையில் மயங்கிச் சரிந்தனர். பலர் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த நபரின் வெறிச்செயலைப் பார்த்த அங்கிருந்த மக்கள் போலீஸீாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்துச் சென்றனர். இந்தக் கத்திக்குத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேேய பலியானார்கள். காயமடைந்த பலரையும் போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் லாரன்ஸ் வோர்ட் என்பவர் கூறுகையில், “நான் என் நண்பர்களுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பலரும் பூங்காவில் சாப்பிட்டுக்கொண்டும், ஏதோ குடித்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது ஒரு இளைஞர் திடீெரன கூட்டத்துக்குள் வந்து புரியாத மொழியில் ஏதோ பேசி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தன் அருகில் இருந்தவர்கள் மீது குத்தத் தொடங்கியதால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினோம்” எனத் தெரிவித்தார்.
தேம்ஸ் வேலி போலீஸின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர் இயான் ஹன்டர் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் ஒரு இளைஞரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதை தீவிரவாதச் செயலோடு தொடர்புபடுத்தி இப்போது பார்க்க முடியாது. பலரும் அவ்வாறு சந்தேகித்தாலும், விசாரணையில்தான் தெரியவரும்.
இந்தத் தாக்கதலுக்கான காரணம் குறித்து கைதான அந்த இளைஞரிடம் விசாரித்து வருகிறோம். இந்தத் தாக்குதல் குறித்த புகைப்படம், வீடியோ ஏதும் மக்களிடம் இருந்தால் அதை வெளியிட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி இதைச் சொல்கிறோம். மக்கள் பூங்காவுக்குள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்தத் தாக்குதலுக்கும் கறுப்பினத்தவர்கள் மீதான இனவெறித் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், “ரீடிங் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். விரைவாக வந்து குற்றவாளியைக் கைது செய்த போலீஸாரைப் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.
பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் கூறுையில், “ரீடிங் நகரில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் எனக்குக் கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கிறேன். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் வந்து நடவடிக்கை எடுத்த போலீஸாருக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.