

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் கூறும்போது, “கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1,50,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்றாகும். கரோனா வைரஸ் வேகமாகவும், ஆபத்தாகவும் பரவி வருகிறது.
பெரும்பாலான மக்கள் இன்னும் எளிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து நாடுகளையும் அனைத்து மக்களையும் தீவிர விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.