Last Updated : 20 Jun, 2020 01:14 PM

 

Published : 20 Jun 2020 01:14 PM
Last Updated : 20 Jun 2020 01:14 PM

அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக தமிழர் நியமனம்

இந்திய - அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்ற சென்னையைச் சேர்ந்த தமிழரை அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக அமெரிக்க செனட் தேர்வு செய்துள்ளது.

58 வயதாகும் பஞ்சநாதன் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஆண்டு பட்ஜெட் தொகை 7.4 பில்லியன் டாலர்களாகும்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் ‘பஞ்ச்’ என்று அழைக்கப்படும் பஞ்சநாதன், மாற்றம் ஏற்படுத்தும் தலைவராகப் பார்க்கப்படுகிறார், இவரது மானுட மைய முயற்சிகள் உலக அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா இவரைப் புகழ்ந்துள்ளது.

அமெரிக்க செனட் தற்போதைய கசப்பான அரசியல் சூழலில் இருந்தாலும் தேசத்தின் முதன்மை விஞ்ஞானியை தேர்வு செய்ததில் பிளவு ஏதுமில்லை. இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் வரையிலும் செனட் அதிவிரைவாகச் செயல்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 15-வது இயக்குநரான டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் ஜூலை 6-ம் தேதி பொறுப்பேற்கிறார்.

பஞ்சநாதன் தன் சொந்த இணையதளத்தில், ‘என்னுடைய சொந்தப் பணி என்னவெனில் வாழ்க்கையை மாற்றும் புதியன புகுத்தல் மூலம் மனித குலத்திற்குச் சேவையாற்றுவது, அதிகாரம் அளிப்பது, இதன் மூலம் மாற்றுத்திறன்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதன் முகத்தை மாற்றுவது’ என்று கூறியுள்ளார்.

டாக்டர் சுப்ரா சுரேஷ் என்பவர் 2010 முதல் 2013 வரை இதே உயர் பதவியில் இருந்த முதல் இந்தியர் ஆவார். டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் இப்பதவிக்கு வந்த 2-வது இந்தியர் ஆவார்.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருதரப்பிலும் இவருக்கு ஆதரவு உண்டு. இவ்வளவு பெரிய பொறுப்பை இந்தியர் கையில் ஒப்படைத்தது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் பெருமையடைந்துள்ளனர்.

பஞ்சநாதன் தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்கள் உத்திப்பூர்வ திட்டங்கள் அமைப்பின் துணைத்தலைவராகவும் இருக்கிறார். அரிசோனா கவர்னர் டக் டியூசி 2018-ல் இவரைத் தனக்கு மூத்த ஆலோசகராக நியமித்தார்.

இவர் 1986-ல் ஐஐடியில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர். 1989-ல் ஒட்டாவா பல்கலையில் எலெக்ட்ரிகல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்கில் பிஎச்.டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் பவுதிகம் பட்டப்படிப்பு படித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x