

சீனா- இந்தியா ராணுவ மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானதற்கு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் மரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் சீனத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்த நிலையில், தற்போது ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
பிரான்ஸுக்கான இந்தியத் தூதர் இம்மானுவேல் லினைன் கூறும்போது, “பணியின்போது இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கும், இந்திய மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இந்தியாவுக்கான ஜெர்மனித் தூதர் வால்டர் ஜெ லிந்தர் கூறும்போது, “கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.