

சீனா - இந்தியா ராணுவ மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானதற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் மரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “சீனாவுடனான சமீபத்திய மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை இந்திய மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதலை உற்றுநோக்கி வருகிறோம். இந்த விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ''கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மையுள்ளது. ஆனால் எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும்'' என்று சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது.