

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு இடையே ராணுவ நிலைகளை வலுவாக பராமரிக்குமாறு தென் கொரிய ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ தென் கொரியாவின் ராணுவ தளபதி மூத்த ராணுவ அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் தென் கொரிய படைகள் அவற்றின் நிலைகளை உறுதியாக பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் ரகசியத் தகவல்களைத் தென்கொரியா வெளியிட்டு வருவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது. மேலும் இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்த்தது.
மேலும் தென் கொரியா உடனான உறவை முறித்து கொள்வதாக அண்மையில் வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தென் கொரியாவுக்கு எதிராக வடகொரியா எடுத்த சமீபத்திய நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக, உலக நாடுகளின் எதிர்பை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வட கொரியாவின் இந்த அத்துமீறல்களை தென் கொரியா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாகவே தென் கொகொரியா செயல்பட்டு வந்தது.
இருப்பினும் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு வடகொரியா செவி சாய்க்காமல் இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தென் கொரியா - வடகொரியா இடையே தற்போது மோதல் வலுத்துள்ளது.