Last Updated : 19 Jun, 2020 08:07 AM

 

Published : 19 Jun 2020 08:07 AM
Last Updated : 19 Jun 2020 08:07 AM

உலகமே கரோனாவினால் வாழ்வா-சாவா போராட்டத்தில் இருப்பதை சாதகமாக்கி இந்திய எல்லையில் சீனா வேலையைக் காட்டுகிறது: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் எய்தியது, தொடர்ந்து எல்லையில் இந்தியாவை சீண்டி வருபவை போன்றவை எதனால் என்றால் உலகமே கோவிட்-19 வைரஸ் விவகாரத்தில் மூழ்கியிருப்பதை சீனா தங்களுக்குச் சாதகமாக்கி எல்லையில் வேலையைக் காட்டுகிறது என்று அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகார உதவி செயலாளர் டேவிட் ஸ்டில்வெல், கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகமே கவனம் செலுத்தி வரும் வேளையில் சீனா தனது ராணுவச் செயல்பாட்டை மையப்படுத்துவதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதோடு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்திய-சீனா நிலைமைகளை நெருக்கமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்தார்

சமீபத்திய இந்திய எல்லையில் சீனா காட்டும் வேலைகள் முன்பு டோக்லாம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டும் வேலையை ஒத்திருக்கிறது என்கிறார் ஸ்டில்வெல்.

“சீனா இந்திய எல்லையில் இவ்வாறு செய்வது ஏனெனில் உலகமே கரோனாவில் உள்ளது, அனைவரும் வாழ்வா சாவா பிரச்சினையை எதிர்கொள்கின்றனர், கரோனா பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தக் கவனச்சிதறலை அல்லது கவனக்குவிப்பை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துவோம் என்று சீனா மதிப்பிட்டிருக்கலாம்.

ஆனால் இதனை அமெரிக்க அரசு நிலைப்பாடாக நான் கூறவில்லை. பொதுவெளியில் இது தொடர்பாக நிறைய விளக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் இந்தியா-சீனா எல்லை தகராறை நெருக்கமாக கவனித்து வருகின்றோம். சீனாவின் சமீபத்திய செயல்பாடு பெருமளவு அதன் கடந்த கால எல்லைச் செயல்பாடுகளை ஒத்திருக்கிறது. 2015-ல் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம் செய்த போது என்று நினைக்கிறோம். அதை இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியில் மேலும் ஆழமாக, அதிக தூரம் ஊடுருவியுள்ளனர். இது பேச்சுவார்த்தைக்கான தந்திரமா அல்லது தாங்கள்தான் வலிமை மிக்கவர்கள் என்பதைக் காட்டுவதற்காக செய்யப்படும் செயலா என்பது எனக்குத் தெரியவில்லை.

டோக்லாமில் இதே போன்று பார்த்தோம். இந்தியா, தென் சீன கடல் பகுதி, ஹாங்காங் விவகாரங்கள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கும் போது சீன ராணுவத்தின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்றே கருதுகிறோம். மேலோட்டமாகப் பார்த்தால் வணிகம் அல்லது வர்த்தகம் தொடர்பானது போல் தெரியவில்லை.

சீனாவுடன் நியாயமான இருதரப்பும் விட்டுக்கொடுக்கும், தீர்க்கமான உறவுகளை அமெரிக்கா விரும்புகிறது, அதாவது இது வெறும் உரையாடல் மட்டுமல்ல செயல் என்பதையும் உள்ளடக்கியது.

சீன வெளியுறவு அமைச்சருடன் ஏற்பட்ட சந்திப்பில் மைக் பாம்பியோ கரோனா வைரஸ் பெருந்தொற்று எப்படி தோன்றியது என்பதை சீனா வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இது அரசியல் அல்ல மக்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பதால் சீனா தகவல்களை பகிர்வது அவசியம் என்று மைக் பாம்பியோ வலியுறுத்தினார்.

அதாவது ஆக்கப்பூர்வமான தீர்க்கமான முடிவுகள் கொண்ட உறவுகளை சீனாவுடன் வலியுறுத்துகிறோம், வெறும் வார்த்தைகள் அல்ல ச்செயல்கள் மூலம் தான் நாம் தீர்மானிக்க முடியும். வார்த்தைகளில் அமைதி, சமாதானம் என்று கூறிவிட்டு, செயலில் வலிமையைக் காட்டினால் நிச்சயம் அதை மேலாண்மை செய்ய அமெரிக்கா அதன் அழுத்தத்தை அதிகரிகும், இதில் அமெரிக்கா தனித்து இல்லை.

இது ஏதோ அமெரிக்க-சீனா நிகழ்வு அல்ல, அமெரிக்கா சீனா இடையேயான விவகாரமும் அல்ல. கரோனா என்பது சீனா மற்றும் பிற நாடுகள் சம்பந்தப்பட்டது. ஹாங்காங் குறித்து வலுவான ஜி7 அறிக்கையை இப்போதுதான் பார்த்தோம். சீனாவின் நடத்தையினால் உலகமே கவலைப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் குறிக்கோள் என்னவெனில் சீனாவின் செயல்பாடுகள் அந்நாட்டுக்கு எதிராகவே செல்கின்றன என்பதை அவர்களை புரிந்து கொள்ள வைப்பதுதான். எனவே சீனா ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்மொழிவுகளுடன் பேச்சுவார்த்தை மேஜைக்கு வருமானால் அமெரிக்கா அதனை வரவேற்று, அதன் மூலம் நேர்மறையான விளைவுகளை ஏறப்டுத்த பணியாற்ற முடியும்” என்றார் ஸ்டில்வெல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x