ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வு: வாக்கெடுப்பில் 184 வாக்குகள் பெற்று வெற்றி

பிரதமர் மோடி : கோப்புப்படம்
பிரதமர் மோடி : கோப்புப்படம்
Updated on
2 min read

ஐக்கிய நாடுகள் சபையின் வலிமை மிகுந்த பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினர் நாடுகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் இந்திய 193 வாக்குகளில் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

இதன் மூலம் சக்திவாய்ந்த பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் 10 நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

5 இடங்களுக்கு நடந்த தேர்தலில் இந்தியாவுடன் சேர்ந்து, அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் வென்றன. கனடா தேர்தலில் தோல்வியடைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2 ஆண்டுகள் உறுப்பினர் பதவி நிறைவு பெற்ற நாடுகளுக்குப் பதிலாக புதிதாக உறுப்பு நாடுகள் தேர்வாகும். அந்த வகையில் இந்த ஆண்டு 5 இடங்கள் காலியாகின.

192 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தலில் வெற்றிக்கு மூன்றில் இரு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். அந்த வகையில் இந்தியாவுக்கு நிரந்தரமில்லாத உறுப்பினர் பதவி கிடைக்க 184 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. இதன்படி 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகளுக்கு இந்தியா இந்தப் பதவியில் இருக்கும்

இந்தியாவுடன் சேர்த்து நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகளாக எஸ்தோனியா, செயின்ட் வின்சென்ட், கிரிநாடைன்ஸ், துனிசியா, வியட்நாம், பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளன.

டோமினிக் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கான பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவதையடுத்து தேர்தல் நடத்தப்பட்டு இந்தியா உள்பட 5 நாடுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

ஆப்பிரிக்கா-ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்காக 2 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருந்தன. 2 இடங்களுக்காக நடந்த தேர்தலில் டிஜிபோட்டி, இந்தியா, கென்யா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. லத்தீன் அமெரிக்கா, கரிபீயன் நாடுகளுக்கு ஒரு உறுப்பினர் மட்டும் காலியாக இருந்தது. மேற்கு ஐரோப்பாவிற்கு 2 காலியிடங்கள் இருந்தன. இதற்காக கனடா, அயர்லாந்து, நார்வே நாடுகள் போட்டியிட்டன.

ஆசிய-பிசிபிக் பிரிவில் நடந்த தேர்தலில்தான் இந்தியாவுக்கான இடம் கிடைத்துள்ளது. ஆசிய பசிபிக் பிரிவில் 55 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் இந்தியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்ததால் இந்தியா வென்றது.

ஏற்கெனவே ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமில்லா உறுப்பினராக கடந்த 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 ஆண்டுகளில் இந்தியா வென்றிருந்தது. சமீபத்தில் 2011-12 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடியின் ஆட்சியில் மீண்டும் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், “பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றுள்ளதால், உலகத்தை வாசுதேவ குடும்பம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கொண்டுவர முயற்சிக்கும்.

ஐ.நா.வில் இந்தியாவின் பயணம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. ஐ.நாவின் அடிப்படை உறுப்பினராக இந்தியா இருக்கிறது. ஐ.நா.வின் இலக்குகளை அடைவதற்கும், செயல்படுத்துவதற்கும், திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in