Last Updated : 17 Jun, 2020 02:35 PM

 

Published : 17 Jun 2020 02:35 PM
Last Updated : 17 Jun 2020 02:35 PM

எல்லையில் மோதல்: உயிரிழப்பைப் பற்றிக் கூற மறுப்பு; மீண்டும் இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை - சீனா அறிவிப்பு  

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

பெய்ஜிங்

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு இறையாண்மை இருக்கிறது. அது சீனாவைச் சார்ந்ததுதான். எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே விரும்புகிறோம். மேலும், மோதலை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.

ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள், ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் ஆகியோருடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின் சீன அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான செய்தியும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மையுள்ளது. ஆனால் எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும்.

எல்லையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இந்திய ராணுவம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்கிறோம். சீன ராணுவத்தினரைச் சீண்டுவது, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, சரியான பாதையில் வந்து எல்லையில் ஏற்பட்ட சிக்கல்களை அமைதிப்பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவே விரும்புகிறோம்.

அதேசமயம் நிர்வாகரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடரும். சரியோ, தவறோ இதைத் தெளிவாகக் கூறுகிறோம். இந்தத் தாக்குதல் சம்பவம் சீனாவின் எல்லைக்குள் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்ததால் சீனா மீது பழிபோட முடியாது. இப்போது கல்வான் பள்ளதாக்கு பகுதி நிலையாகவும் கட்டுக்கோப்பாகவும் அமைதியாக இருக்கிறது. சீனத் தரப்பில் இருந்து கூறுவது என்னவென்றால், இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை”.

இவ்வாறு ஹூவா லிஜான் தெரிவித்தார்.

ஆனால், சீனத் தரப்பில் எத்தனை பேர் பலியாகியுள்ளார்கள், காயமடைந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சீனாதான் அத்துமீறி எல்லை கடந்து வந்து தாக்கிவிட்டு தற்போது நிலைப்பாட்டை மாற்றுகிறது. அனைத்துவிதமான நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் இருக்கிறது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. அதேபோல சீனா தரப்பிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x