கரோனா: தாய்லாந்தில் 24 நாட்களாக தொற்று, இறப்பு இல்லை

கரோனா: தாய்லாந்தில் 24 நாட்களாக தொற்று, இறப்பு இல்லை
Updated on
1 min read

தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக கரோனா தொற்று மற்றும் பலி பதிவாகவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து சுகாதார அதிகாரிகள் தரப்பில், “தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக கரோனா தொற்று மற்றும் இறப்பு உள்நாட்டில் ஏற்படவில்லை. சமீபத்தில் கண்டறியப்பட்ட தொற்றுகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதிலும் கடந்த மூன்று நாட்களாக கரோனா தொற்று யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் பெரும்பாலான நாடுகள் அதன் எல்லைகளை மூடின. தற்போது கரோனா தொற்று நீடித்தாலும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு எல்லைகளைத் திறந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் ஈட்டும் தாய்லாந்து, கரோனாவுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

தாய்லாந்து ஆரம்ப நிலையிலேயே கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது. இதுவரை 3,135 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 58 பேர் பலியாகி உள்ளனர்.

தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் 12 சதவீதம் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கிறது. கரோனா பரவலால் தாய்லாந்தின் சுற்றுலாத் துறை முடக்கத்தைச் சந்தித்தது. சென்ற ஆண்டு கிட்டதட்ட 4 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1.4 கோடியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 30-ம் தேதி வரை வெளிநாட்டு விமானங்களுக்கு தாய்லாந்து தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in