

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு 80 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, சீனா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிதாக வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் இதுவரை 81,18,671 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,39,198 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 8 வாரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இருமடங்காகி உள்ளன.
மேலும் 42,16,319 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவில் கரோனாவால் 21,82,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,18,283 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 8,91,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44,118 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.