Last Updated : 15 Jun, 2020 01:25 PM

 

Published : 15 Jun 2020 01:25 PM
Last Updated : 15 Jun 2020 01:25 PM

சீனாவில் கரோனா 2-வது கட்ட அலையா? பெய்ஜிங் மொத்த மார்க்கெட் மூடல்; 67 பேருக்கு தொற்று; ஏறக்குறைய 30 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை 

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்றவர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு மீண்டும் கரோனா பிரசோதனையை சீன அரசு செய்து வருகிறது.

சீனாவில் நேற்றுவரை பெய்ஜிங் மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்றவர்களில் 67 பேருக்கு அறிகுறிகளோடு கரோனா இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 112 பேர் அறிகுறி இல்லமல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதியிருந்து நேற்று வரை 29 ஆயிரத்து 936 பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ஜிங் நகர சுகாதாரத்துறை அதிகாரி குவாஹோ கூறுகையில், “கடந்த மே 30-ம் தேதியிலிருந்து இதுவரை ஏறக்குறைய 30 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளோம். இதில் 12,973 பேருக்கு நெகட்டிவ. மற்றவர்களுக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.

இதுவரை 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 112 பேர் அறிகுறி இல்லாமல் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜனவரியிலிருந்து இதுவரை பெய்ஜிங்கில் மட்டும் 499 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 411 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 79 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 7 பேர் அறிகுறியில்லாத கரோனாவால் கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பெய்ஜிங்கின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியி்ட்ட அறிக்கையில், “பெய்ஜிங்கில் ஜின்பாடி மொத்த காய்கறிச் சந்தையில் மூலம் பரவிய கரோனா பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்தது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் மீண்டும் பரவியுள்ளது.

வங்கதேசத்திலிருந்து குவாங்ஜு நகரம் வந்த விமானத்தில் கடந்த 11-ம் தேதி வந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சீனாவில் மீண்டும் கரோனா 2-ம் கட்ட அலை பரவல் இல்லை. அவ்வாறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பெய்ஜிங்கில் உள்ள 6 மொத்த காய்கறிச் சந்தைகளையும் மூடிவிட்டோம். அதற்குப் பதிலாக மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க வழி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

பெய்ஜிங்கின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளர் யாங் பெங் கூறுகையில், “முதலில் மொத்த சந்தையில் இருந்து பரவியதாக அறிந்தோம். அதன்பின்புதான் கரோனா வைரஸ் ஐரோப்பாலிருந்து வந்தவர்களால் பரவியது என வைரஸின் கட்டமைப்பை வைத்துக் கண்டறிந்தோம். ஏனென்றால் ஐரோப்பாவில் இருந்து ஏராளமான சீனர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கரோனா இருந்துள்ளது.

அக்டோபர் மாதத்திலிருந்து சீனாவில் பனிக்காலம் தொடங்கிவிடுவதால், மீண்டும் 2-வது கட்ட அலை தொடங்கிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம். இப்போதுவரை 2-ம் கட்ட அலை வரவில்லை. பெய்ஜிங்கில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நியூசிலிக் ஆசிட் பரிசோதனையையும், ஆன்ட்டிபாடி பரிசோதனையையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். காய்ச்சல், இருமல் இருப்போருக்கு சிடி ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x