

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் அன்மோல் நரங் (23)என்பவர் வெஸ்ட் பாய்ன்ட் பகுதியில் உள்ள மிகச்சிறப்பு வாய்ந்த அமெரிக்க ராணுவ அகாடமியில் 4 ஆண்டு பயிற்சி முடித்துள்ளார். பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
மத நம்பிக்கையை பின்பற்றியவாறு இந்த அகாடமியில் பயிற்சி முடித்த முதல் சீக்கிய பெண் என்ற வரலாறு படைத்துள்ளார் நரங். இவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்தவர்.
‘‘வெஸ்ட் பாய்ன்ட் ராணுவ அகாடமியில் ராணுவ பயிற்சி முடிக்கவேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது மிகுந்த பெருமையாக உள்ளது. ஜார்ஜியாவில் வசிக்கும் எனது சமூகத்தவர் கொடுத்த நம்பிக்கை, ஆதரவு இந்த பயிற்சி முடிப்பதற்கு துணையாக இருந்தது. லட்சியத்தை நான் எட்டியதன்மூலம், சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் நமது எதிர்கால தொழிலுக்கான பாதை சாத்தியமாகும் என்பதை சீக்கிய அமெரிக்கர்களுக்கு உணர வைக்கிறேன்’’ என்று பயிற்சி நிறைவையொட்டி சீக்கிய கூட்டமைப்பு வாயிலாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் நரங் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது லெப்டினன்ட் ஆக பயிற்சி முடித்த நரங், அதிகாரிகளுக்கான தொடக்க நிலை ஆளுமைப் பயிற்சியை ஒக்லஹாமாவில் உள்ள போர்ட் சில் பகுதி பயிற்சி மையத்தில் முடிப்பார். அதன்பிறகு அவர் வரும் 2021 ஜனவரியில் ஜப்பான் நாட்டில் ஒகிநாவா என்ற இடத்தில் தனது முதல் பதவியை ஏற்பார்.
அன்மோல் நரங் சீக்கிய மத அடையாளங்களுடன் பணிபுரிய தனி அனுமதி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.