Published : 12 Jun 2020 04:57 PM
Last Updated : 12 Jun 2020 04:57 PM

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி; பலர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஷா இ சுரி மசூதியில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்புப் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தத் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக சமீபத்தில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x