Last Updated : 12 Jun, 2020 09:18 AM

 

Published : 12 Jun 2020 09:18 AM
Last Updated : 12 Jun 2020 09:18 AM

காசநோய், போலியோ தடுப்பு மருந்துகள் கரோனாவை எதிர்த்துப் போராடுமா? - விஞ்ஞானிகள் ஆலோசனையின் பேரில் அடுத்த முயற்சி

உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்காக அரசுகளும் மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் விஞ்ஞானிகள் சிலரின் ஆலோசனையின் பேரில் அமெரிக்காவில் காசநோய் மற்றும் போலியோவைத் தடுக்கும் மருந்துகள் கரோனாவுக்குப் பலனளிக்குமா என்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 89 ஆயிரத்து 701 ஆக உள்ளது, இதில் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 34 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 86 ஆக உள்ளது, சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11,57,581 ஆக உள்ளது.

காசநோயைத் தடுக்கும் வாக்சைன் நாவல் கரோனா வைரஸுக்கு ஒத்து வருமா என்பதற்கான ஆய்வுகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. பிற ஆய்வாளர்கள் போலியோ தடுப்பு மருந்து பயன் தருமா என்று அறிவியல் ஆய்விதழில் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பலதரப்பட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிரானதாக உள்ளார்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் விதமாக காசநோய், போலியோ தடுப்பு மருந்துகள் கோடிக்கணக்கானோருக்கு உலகம் முழுதும் செலுத்தப்பட்டு வருகின்றன, தற்போது கரோனா வைரஸுக்கு எதிராகவும் முயற்சி செய்து பார்க்கப்பட்டு வருகிறது.

பேஸிலஸ் கால்மெட்-குயெரின் என்ற பிசிஜி தடுப்பு மருந்து கரோனா நோயாளிகளுக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவிலும் சோதிக்கப்பட்டு வருகிறது.

டெக்சாஸ் ஏ அண்ட் எம் மருத்துவ அறிவியல் மையத்தின் கிருமி நோய் உருவாக்கவியல் மற்றும் நோய் தடுப்பாற்றல்வியல் பேராசிரியர் ஜெஃப்ரி டி.கிரிலியோ கூறும்போது, “பிசிஜி வாக்சைன் மட்டுமே கோவிட்-19-ஐ எதிர்க்க கொடுக்கப்பட தகுதியானது” என்றார்.

நம் உடல் எதிர்ப்புச் சக்தி அமைப்புக்கு குறிப்பிட்ட சில கிருமிகள் பற்றிய நினைவாற்றலை அதிகரித்து அதற்கு எதிராகச் செயல்பட வைப்பதுதான் வாக்சைன் தத்துவமாகும். ஆனால் ஆண்டுகள் பல கழிந்து உயிருள்ள, ஆனால் பலவீனமடைந்த நோய்க்கிருமிகளை பயன்படுத்தும் வாக்சைன்களுக்கு அதன் இலக்கை மீறிய விளைவுகள் உள்ளன.

நோய்தடுப்பாற்றல் சக்தியின் பிற கூறுகளை இவை மீண்டும் தட்டி எழுப்புகின்றன, இது பிற நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் செயலப்டுகின்றன என்று தெரியவந்துள்ளது, அந்தவகையில்தான் போலியோ, காசநோய் தடுப்பு மருந்துகளை கோவிட்-19க்கு பரிந்துரைக்கின்றனர் விஞ்னானிகள். இதில் சுவாசப்பாதை நோய் எதிர்ப்பு சக்தியும் அடங்கும்.

கோவிட்-19-ஐ முற்றிலும் ஒழிக்க இது பயன்படுமா என்பது தெரியாவிட்டாலும் அதன் தீவிரத்தைக் குறைத்து உடல் நோய் எதிர்பாற்றலே அதை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாக்சைன்கள் திறம்பட வேலை செய்யுமானால் கரோனா இரண்டாவது அலையை குறைந்தபட்சம் தடுக்க முடியும் என்பதே இப்போதைய நம்பிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x