

ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அதிகபட்சமாக 2லட்டம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவில் கரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்கும் நேரத்தில் தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது .
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.