

அமெரிக்காவில் உணவுப் பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிலாளர்களிடையே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விற்பனை நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்தவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “அமெரிக்காவில் முன்பு இறைச்சி பேக்கிங் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களிடையே கரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது காய்கறி பேக்கிங் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடையேயும் தொற்று பரவி வருகிறது. இதனால் அந்நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வேளாண் வேலைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கலாம். ஆனால், அவற்றை பேக் செய்து கடைகளுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அருகருகே அமர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களிடையே தொற்று பரவி வருகிறது. இதனால் காய்கறிகள், இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு அவற்றை முறையாகக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள யாகிமாவில் 600 பண்ணைத் தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் கரோனா தொற்று உறுதியானது. இதில் 62 சதவீதம் பேர் ஆப்பிள் பழங்களை பேக் செய்யும் பணிகளில் ஈடுபட்டவர்கள். கரோனா தொற்று அறிகுறியை உணர்ந்தாலும், தொழிலாளர்கள் வருமானம் கருதி கரோனா அறிகுறியை மறைத்து வேலைக்கு வருவதாகவும், அதனால் அவர்களிடையே தொற்று அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் பண்ணை மற்றும் உணவுப்பொருள் பேக்கிங் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு செய்து தரப்படவில்லை என்று கடந்த மாதம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.