Published : 11 Jun 2020 01:29 PM
Last Updated : 11 Jun 2020 01:29 PM

கொலம்பஸ் சிலையை சாய்த்து வீழ்த்திய பூர்வக்குடி அமெரிக்க போராட்டக்காரர்கள்: இவரால்தான் தங்கள் மூதாதையர்கள் அழிந்தனர் என ஆத்திரம்

வெள்ளை குடியேற்றவாதிகளினால் அழித்தொழிக்கப்பட்ட பூர்வக்குடி அமெரிக்கர்கள் எப்போதுமே பெரிய கண்டுபிடிப்பாளரான கொலம்பஸை மரியாதைக்குரியவராக ஏற்றுக் கொண்டதில்லை.

இவரது பயணக் கண்டுப்பிடிப்புகளினால்தான் அமெரிக்க நாடுகள் காலனியாதிக்கக் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தங்கள் மூதாதையர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

இத்தாலியரான கொலம்பஸின் கடல்பயணங்களை ஆதரித்து நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்தது ஸ்பானிய முடியாட்சி. கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் கால்பதித்த முதல் ஐரோப்பியராகவும் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகவும் கொலம்பஸ் அறியப்படுகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் கருப்பரினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை போலீஸார் ஒருவர் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொன்றது மிகப்பரவலான, வன்முறையான நிறவெறி எதிர்ப்புப்போராட்டங்களைக் கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்டபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது. பூர்வக்குடி அமெரிக்கர்கள் சிலர் தலைமையில் போராட்டக்காரர்கள் சிலர் கொலம்பஸ் சிலையை தரையில் சாய்த்தனர்.

இது தொடர்பாக சமூகச் செயல்பாட்டாளர் மைக் ஃபோர்சியா கூறும்போது, “இது சரியான செயல்தான். சரியான நேரமும் கூட. இதற்காக என்னைக் கைது செய்வார்கள். குற்றவழக்கு தொடர்வார்கள். பரவாயில்லை” என்றார்.

மினசோட்டாவில் உள்ள இத்தாலிய-அமெரிக்கர்கள் இந்த வெண்கலச் சிலையை பரிசாக அளித்தனர். இந்த சிலையை வடிவமைத்தவர் கார்லோ பிரியோஷி என்ற சிற்பியாவார்.

செவ்வாயன்று வர்ஜீனியாவில் கொலம்பஸ் சிலை ஒன்று தகர்க்கப்பட்டு ஏரியில் வீசப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க சிவில் யுத்த வீரர்கள் தலைவர்கள் சிலைகளை அகற்றுமாறு அமெரிக்க பிரதிநிதிகள் சபை செய்தித் தொடர்பாளர் நான்சி பெலோசி அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x