

கனடாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,244 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கனடாவின் சுகாதார அமைப்பு கூறும்போது, “ கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,244 ஆக அதிகரித்துள்ளது. 7,897பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கனடாவில் இதுவரை 18 லட்சத்துக்கு அதிகமான மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக அமெரிக்கா - கனடா இடையே எல்லை மூடல் தொடர்கிறது. எல்லை மூடல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.