Published : 09 Jun 2020 05:34 PM
Last Updated : 09 Jun 2020 05:34 PM

இந்தியாவுடனான எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு: நேபாளம் திட்டவட்டம்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்து கொள்ள விரும்புவதாகவும், எல்லையில் படைகளை குவிக்க விருப்பமில்லை எனவும் நேபாள துணை பிரதமர் ஈஷ்வர் பொக்கிரில் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், தார்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்தவைத்தபோது நேபாள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்தியா புதிதாக அமைத்துள்ள 80 கி.மீ. சாலை எங்கள் எல்லைக்குள் வருகிறது என்று நேபாள அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதை மறுத்த மத்திய அரசு முழுவதும் அந்த சாலை இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது என உறுதி செய்தது.

இதுதொடர்பாக இந்தியத் தூதர் வினய் மோகன் வத்ராவுக்கு சம்மன் அனுப்பிய நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கவாலி, கண்டனத்தைத் தெரிவித்தார்.

நேபாளம் மற்றும் இந்தியா எல்லைகளுக்கு இடையே இருக்கும் மேற்குப்பகுதி கலாபானி. இரு நாடுகளும் கலாபானியை தங்கள் பகுதியாக உரிமை கொண்டாடுகின்றன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்தசூழலில் நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் கே.பி.சர்மா ஒளி, “லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இந்தியாவிடம் இருந்து ராஜதந்திர முறையில், நிர்வாக ரீதியாக மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நேபாள நில திருத்தத்துறை அமைச்சர் பத்மா அர்யால் காத்மாண்டு நகரில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது அந்நாட்டின் திருத்தப்பட்ட அரசியல், நிர்வாக ரீதியான வரைபடத்தை வெளியிட்டார். அதில், இந்தியாவின் எல்லைப்பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப் பகுதியாக சித்தரித்திருந்தது.

இந்த வரைபடத்தை வெளியிட்ட சிறிது நேரத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பை நேபாளத்துக்கு தெரிவித்தது. இதனால் இருநாடுகள் இடையே கசப்பான சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்து கொள்ள விரும்புவதாகவும், எல்லையில் படைகளை குவிக்க விருப்பமில்லை எனவும் நேபாள துணை பிரதமர் ஈஷ்வர் பொக்கிரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் எல்லையில் படைகளை குவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, இது எங்களின் நோக்கமும் அல்ல, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x