ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டத்தின் மூலம் மீண்டும் பிரபலமான கறுப்பினப் பெண்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டத்தின் மூலம் மீண்டும் பிரபலமான கறுப்பினப் பெண்
Updated on
1 min read

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் கறுப்பின மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த நாடுகளில் போராட்டம் செய்து வருகின்றனர். blacklivesmatter என்ற இயக்கத்தின் கீழ் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் வெள்ளையரான காவல்துறை அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்ய முயற்சி செய்வார். அப்போது அந்தப் பெண், தன்னை ஏன் கைது செய்கிறீர்கள்? உங்களுக்கு வேலை போகப் போகிறது என்று சொல்வார்.

பின்னர் அதே வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே அதை ஒரு பாடலாக மாற்றிப் பாடுவார். கூடவே நடனமும் ஆடுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ஜோன்னிகா சார்லஸ். அந்தச் சம்பவத்துக்கு முன்பு வீடற்றவராக, போதைப் பொருட்களுக்கு அடிமையாக, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவராக இருந்த ஜோன்னிகா அதன் பிறகு அமெரிக்காவில் மிகப் பிரபலமான ஒரு பெண்ணாக மாறினார். தான் ஏன் பிரபலமானேன் என்று கூட அவருக்கு அப்போது தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது பல மாதங்களுக்குப் பிறகு ஜார்ஜ் ஃப்ளாய் போராட்டங்கள் அமெரிக்காவை கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் வைரலாகியுள்ளார் ஜோன்னிகா.

அவர் பாடிய அந்தப் பாடலை யாரோ ஒரு டீஜே, பின்னணி இசை சேர்த்து ட்விட்டரில் பதிவிட மீண்டும் உலக அளவில் ட்ரெண்டானது ஜோன்னிகாவின் பாடல். ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டங்களில் கூட ஜோன்னிகாவின் பாடல்தான் ஒலிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in