

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. மினியாபிலிஸ் நகரில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிபர் ட்ரம்ப்பும், மெலானியா ட்ரம்பும் இந்தியா வந்திருந்த போது மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் நேரம் செலவிட்டனர்.
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, ‘காந்தியின் ஆஸ்ரமத்தை நானும் மெலானியாவும் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். இங்குதான் புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை அவர் தொடங்கினார்.’ என்று பேசினார்.
இந்நிலையில் காந்தி சிலை சேதம் குறித்து ட்ரம்ப் சுருக்கமாக ‘அவமானம்’ என்று வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்புக்காக அவரது ஆலோசகர் கிம்பர்லி கில்ஃபாயில், “பெருத்த ஏமாற்றம்” என்று காந்தி சிலை சேதம் குறித்து குறிப்பிட்டார்.
வடக்கு கரோலினா செனட்டர் டாம் டில்லிஸ், “காந்தி சிலை சேதம் செய்யப்பட்டது அவமானகரமானது, அமைதிப் போராட்டம் சத்தியாகிரகத்தின் போராளி காந்தி, அகிம்சை எப்படி மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை நிரூபித்தார். ஆனால் இங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. இது நம்மை ஒன்றிணைக்காது” என்று தெரிவித்தார்.