Last Updated : 09 Jun, 2020 08:32 AM

 

Published : 09 Jun 2020 08:32 AM
Last Updated : 09 Jun 2020 08:32 AM

சமூகவிலகல் தேவையில்லை; பார்ட்டி, விழாக்களுக்கு தடையில்லை: கரோனா இல்லாத நாடானதால் நியூஸிலாந்து அறிவிப்பு: வெளிநாட்டினர் வரத் தடை நீடிப்பு

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி

வெலிங்டன்


நியூஸிலாந்து நாட்டில் இருந்த கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்து, சுத்தமான நாடாக மாறிவிட்டதால், அந்நாட்டில் சமூக விலகல் இனி கடைபிடிக்கத் தேவையில்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கூடி கூட்டம் நடத்தலாம், திருமணம், இறுதிச்சடங்கு, பொதுப்போக்குவரத்துக்கு எதற்கும் தடையில்லை என அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இந்த நடைமுறை அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நியூஸிலாந்தில் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், எல்லைகள் மட்டும் மூடப்பட்டு வெளிநாட்டினர் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன் ஒரே ஒருகரோனா நோயாளி மட்டும் இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் அவரும் நேற்று குணமடைந்தார். இதற்கிடையே கடந்த இரு வாரங்களாக நியூஸிலாந்து அரசு தீவிரமான பரிசோதனைநடத்தியதில் நாட்டில் ஒருவருக்கு கூட கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து புதிய விதிமுறைகளை அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் அறிவித்தார்

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் இன்று நிருபர்களிடம் கூறுகையில் “ நம்முடைய நாட்டில் இப்போது எந்த கரோனா நோயாளியும் இல்லை. கரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், கரோனா வைரஸ் நோயாளி இல்லாத நாடாகஅடுத்து வரும் காலங்களில் நம் நாடு இருக்கும் என்பதற்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது

ஆனாலும் நாம் இப்போது பாதுகாப்பாக, வலிமையான நிலையில்இருக்கிறது. கரோனாவுக்கு முந்தைய வாழ்க்கைப் பாதைக்கு செல்வது இனிமேல் எளிதானது அல்ல என்றாலும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துதல் , மக்களின் உடல்நிலை ஆகியவற்றைக் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும்

. மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்கத் தேவையில்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் கூட்டங்களில் சேர்வும், ஒன்றாகச் சேரவும் தடையில்லை. ஆனால், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், வெளிநாட்டினவுருக்கு தடை நீடிக்கிறது

என்னுடைய வேலைகள் அனைத்தும் முடிந்துவிடவில்லை, இனிமேல் எந்த மைல்கல்லும் இல்லை என நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார்

கடந்த மார்ச் 25-ம்தேதி முழுமயாக லாக்டவுனை நியூஸிலாந்து அறிவி்த்து எந்த வெளிநாட்டினரும் உள்ளே வரத் தடைவிதித்தது. அந்நாட்டு மக்கள் வந்தால்கூட 14 நாட்கள் கண்டிப்பாக தனிமை முகாமில் இருந்து வர வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது.

அதுமட்டுமல்லாமல். 4 கட்ட எச்சரிக்கை முறையை செயல்படுத்திய நியூஸிலாந்து அரசு அனைத்து வர்த்தக, தொழில்நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளை மூடியது. மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க அறிவுறுத்தப்பட்டது.

5 வாரங்களுக்கு பின் ஏப்ரல் மாதம் 3-ம் கட்ட நிலையில் அடியெடுத்து வைத்து, கடைகளில் உணவு வாங்கலாம், அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் விற்கலாம் என்று அரசு அறிவித்தது. இதனால் முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்டத்தில் பெருமளவு கரோனா நோயாளிகள் உருவாவது குறைந்தது.

அதன்பின் மே மாதம் நடுப்பகுதியில் 2-வது கட்ட நிலைக்குச் சென்று பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்தது நியூஸிலாந்து, அதேசமயம் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது. இதில் கடந்த 17 நாட்களாக நாட்டில் எந்த கரோனா நோயாளியும் புதிதாக உருவாகவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் ஜூன் 22-ம் தேதி முழுமையான கட்டுப்பாடுகளை நீக்க அரசு முன்பு திட்டமிட்டிருந்தது ஆனால், கரோனா இல்லாத நாடாக திட்டமிட்ட நாளுக்கு முன்பே மாறியதால், முதல்கட்டதுக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்தது.

இந்த முதல்கட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படலாம். திருமணங்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றில் கட்டுப்பாடு இல்லை, பொதுப்போக்குவரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பயணிக்கலாம். சமூக விலகல் தேவையில்லை, ஆனாலும் கடைபிடித்தல் அவசியம்.

நியூஸிலாந்தில் இன்று முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், பொருளாதார சூழல் விரைவில் சீரடையும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நியூஸிலாந்தில் ஒட்டுமொத்தமாகவே 1,154 பேர் மட்டும்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டனர், 22 பேர்தான் இறந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x