

கரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை கப்பல் ஷாருல் ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாய் நாட்டுக்கு தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.
இதன் ஒரு பகுதியான 'சமுத்திர சேது' என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடுகிறது. இதில் இலங்கையில் இருந்து 650 இந்தியர்களுடன் முதல் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் கரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை கப்பல் ஷாருல் ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. ஈரானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்துள்ள இந்தியர்கள் ஏற்கெனவே பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசுடன் இணைந்து இந்திய தூதரகம் செய்துள்ளது. துறைமுகம் வந்து சேர்ந்த பயணிகள் அனைவரும் போதிய முன்னெச்சரிக்கையுடன் இறக்கப்பட்டு முழுமையான பரிசோதனை செய்யப்படுகின்றனர். அவர்கள் கப்பலில் ஏற்றப்பட்ட பிறகு அங்கிருந்து கப்பல் இந்தியா புறப்படும்.