Published : 08 Jun 2020 06:26 AM
Last Updated : 08 Jun 2020 06:26 AM

ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதே சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது- ஆராய்ச்சி முடிவுகள் கருத்து

லண்டன்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இந்தியாவிலும் தற்போது பல்வேறுமாநிலங்களில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடைப்பிடிக்கும் ஊரடங்கு நடைமுறையை எவ்விதம் விலக்குவது என்பது தொடர்பாக யுசிஎல்மற்றும் ஸின்ஹுயா பல்கலைக் கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இது நேச்சர் இதழில் மனித செயல்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்போது பொருள் விநியோக சங்கிலி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இது தொடர்பாக 140 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கரோனா வைரஸ் பரவலால் நேரடியாக பாதிக்கப்படாத நாடுகளும் அடங்கும்.

சீனாவில் 2 மாதங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் ஓரளவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4 மாதம் முதல் 6 மாதங்கள் வரை சில நாடுகளில் பின்பற்றப்பட வேண்டியிருக்கும். இதற்கு பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுவது மட்டும் காரணமல்ல, வைரஸ் பரவலின் தீவிரம் அங்கு அதிகமாக இருப்பதும் காரணமாகும்.

நீண்ட காலமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொழில் துறை தனது வழக்கமான சூழலுக்குத் திரும்ப கால அவகாசம் தேவைப்படும். இதனால் படிப்படியான தளர்வுகள் பிராந்திய அளவில் தீர்வு அளிப்பதோடு சர்வதேச அளவிலும் விநியோக சங்கிலி தொடர்வதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்படாத நாடுகள் கூட மக்களின் நுகர்வு குறைந்து போனதால் அவற்றின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீத அளவுக்கு பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குறிப்பாக சுற்றுலா துறையை பெரிதும் சார்ந்துள்ள கரீபியன் நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் எரிசக்தியை சார்ந்துள்ள கஜகஸ்தான் போன்ற நாடுகள், ஏற்றுமதியை பெரிதும் சார்ந்துள்ள நாடுகள் பாதிப்பை சந்திக்கின்றன. சர்வதேச நிறுவனங்கள் தாங்கள் பொருட்கள் கொள்முதலுக்கு சப்ளையர்களை பெரிதும் சார்ந்துள்ள சூழலில் அதுவும் பாதிப்பை சந்திக்கும்.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை உற்பத்தி பாதியளவு சரிவைச் சந்திக்கும் என யுசிஎல் பார்ட்லெட் மைய பேராசியர் டபோ குயான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அளவை மதிப்பிடுவது மிகவும் கடினம். குறுகிய காலத்துக்கு உறுதியாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு ஓரளவு பயன் தரும். அதேபோல அதை படிப்படியாக விலக்கிக் கொள்வதுதான் இதில் இருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி. அதன் மூலம்தான் அறுபட்டு போன விநியோக சங்கிலியை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

12 மாதங்கள்

தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளை அடுத்த 12 மாதங்களில் படிப்படியாக தளர்த்த வேண்டும். அவசர கதியில் 2 மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கை தளர்த்தி பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ஒரு முறை ஊரடங்கை அமல்படுத்த வேண்டி இருக்கும். இவ்விதம் மீண்டும் ஒரு முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதார சரிவை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x