அவதூறு வழக்கில் இம்ரான்கானிடம் விளக்கம் கேட்டு பாக். நீதிமன்றம் நோட்டீஸ்

அவதூறு வழக்கில் இம்ரான்கானிடம் விளக்கம் கேட்டு பாக். நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கில், அவரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இம்ரான்கான் தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு சுமத்தியுள்ளார் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷாபாஷ் ஷெரீப் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று வருடமாக நடந்து வருகிற இந்த வழக்கில் ஜூன் 10-ம் தேதிக்குள் இம்ரான்கான் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் பதவி விலக நேரிட்டது. அந்த வழக்கு விசாரணையில் இருந்த சமயத்தில் அந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரி நவாஸ் ஷெரீபின் மூத்த சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தனக்கு 61 மில்லியன் டாலர் பணம் தர முயன்றார் என்று 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.

என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இம்ரான் அவதூறு பரப்பியுள்ளார் என்று ஷாபாஸ் ஷெரீப், இம்ரான் கான் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்குத் தொடர்பாக இதுவரை நடைபெற்ற 60 விசாரணைகளில் 33 தடவை விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஷாபாஸ் ஷெரீப் நேற்று அளித்த மனுவில், ''இந்த வழக்குத் தொடர்பாக இம்ரான்கான் கடந்த மூன்று வருடங்களாக விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறார். எனது பெயருக்குக் களங்கம் விளைக்கும் வகையில் அவதூறு தெரிவித்ததற்கு நஷ்ட ஈடாக 61 மில்லியன் டாலர் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 10-ம் தேதிக்குள் இம்ரான்கான் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் கூறுகையில், ''ஜூன் 10-க்குள் இம்ரான்கான் பதில் அளிக்காவிட்டால் அவர் பொய்யர் என்பது உறுதியாகிவிடும். ஒரு பொய்யர் என்ற அடிப்படையில் அவர் இந்த தேசத்தை வழிநடத்தும் தகுதியை இழப்பார்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in