

இந்தியாவிலும், சீனாவிலும் கரோனா தொற்றுக்கள் அதிகமாகவே இருக்கும், இந்நாடுகளில் அதிகமாகப் பரிசோதனைகள் செய்தால் அதிக கரோனா தொற்றுக்களைக் காணலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு டெஸ்ட்கள் செய்துள்ளது என்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. மொத்தம் 19,65,708 கேஸ்களில் 11,15,6,38, பேர்கள் இன்னும் கரோனா தொற்றுடன் உள்ளனர், 7,38,646 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றில் 6வது இடத்துக்கு முன்னேறிய இந்தியாவில் பலி எண்ணிக்கை 6649 ஆக அதிகரித்துள்ளது. 114073 பேர் குணமடைந்துள்ளனர். 116059 கரோனா கேஸ்கள் சிகிச்சையிலோ, வீட்டுத் தன்மையிலோ இருந்து வருகின்றனர்.
இந்தியா இதுவரை 40 லட்சம் டெஸ்ட்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப், “நாங்கள் 2 கோடிக்கும் அதிகமாக டெஸ்ட்கள் செய்துள்ளோம். இன்னும் டெஸ்ட்கள் அதிகரித்தால் இன்னும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்.
நான் ஒவ்வொரு முறையும் கூறுகிறேன், டெஸ்ட்கள் அதிகம் செய்யச் செய்ய கேஸ்கள் அதிகமாகும். சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அளவுக்கு டெஸ்ட்கள் செய்தால் அமெரிக்காவை விட அதிக கேஸ்கள் இருக்கவே செய்யும். ஸ்வாப்களில் நீங்கள்பிரமாதமாக டெஸ்ட் செய்து வருகிறீர்கள்”
என்று மெய்னில் உள்ள பியூரிட்டன் மெடிக்கல் புராடக்ட்ஸ் நிறுவனத்தில் ட்ரம்ப் தெரிவித்தார்.
பியூரிட்டன் நிறுவனம் துரிதகதி கரோனா டெஸ்ட்டுக்கு பயன்படும் உலகிலேயே தரமான மருத்துவ ஸ்வாப்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று.
“நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஸ்வாபிலும் பெருமையாக நீங்கள் மிக அழகாக மேட் இன் யுஎஸ்ஏ என்று குறிப்பிடுகிறீர்கள், உங்கள் டெஸ்ட்டிங் திறன்களுக்கு நன்றி. இதனால்தான் மீண்டும் பொருளாதாரத்தை நம்மால் திறக்க முடிகிறது.
நாம் வேலைவாய்ப்பை மீண்டும் அளிப்பதில் அனைவரது கணிப்புகளையும் முறியடித்து மாதாந்திர கணக்கில் வேலைகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது, அமெரிக்க வரலாற்றில் மாதாந்திர பணி நியமன எண்ணிக்கையில் இந்த மாதம் போல் என்றும் இருந்ததில்லை. நவம்பர் 3, தேர்தலுக்கு முன்பாக பிரமாதமான மாதங்கள் உள்ளன.
ஆம் சீனாதான் விரோதி, சீனாவிலிருந்துதான் இந்தக் கரோனா பரவியது. அங்கேயே அதை முடித்திருக்க வேண்டும், அவர்கள் செய்யவில்லை” என்று ட்ரம்ப் சாடினார்.