

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மீது தமிழ் எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் (ஐடிஏகே) தலைவரும் நாடாளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் (டிஎன்ஏ) துணைத் தலைவருமான மாவை எஸ்.சேனாதிராஜா, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மீது பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஎன்ஏ.வின் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் சேனாதிராஜா நேற்று ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் செயல்பாடுகள் டிஎன்ஏ கட்சிக்கு எதிராக இருந்தன. டிஎன்ஏ வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் தேதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி இந்த மாத இறுதியில் மனித உரிமைகள் விசாரணைக்கான ஐ.நா. தூதரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த குழு விசாரணை நடத்த வேண்டும். அதில் வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இவ்வாறு சேனாதிராஜா கூறினார்.