

சீனாவில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஹைதராபாதைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் இந்திய உணவு வகைகளின் சிறப்பு மற்றும் தங்களுடைய சமையல் திறன் குறித்து அந்நாட்டு உணவு பிரியர்கள் மத்தியில் விளக்கமளித்தனர்.
கடந்த 1962-ல் நடைபெற்ற போருக்குப் பிறகு இந்தியா சீனா இடையிலான உறவு சீரடைந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இந்திய கலாச்சாரத்தை பரப்பும் வகையில் ‘கிளிம்சஸ் ஆப் இந்தியா' என்ற பெயரில் கலாச்சார திருவிழாவை சீனா முழுவதும் ஓராண்டுக்கு நடத்த இந்திய திட்டமிட்டுள்ளது. இவ்விழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. சென்னையின் புகழ்பெற்ற கலாஷேத்ரா நடனப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களின் நடனமும் தொடக்க விழாவில் இடம் பெற்றது.
இந்த கலாச்சார விழாவின் ஒரு பகுதியாக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சீன மற்றும் இந்திய கலைஞர்கள் நடனமாடி னர். ஹைதராபாதைச் சேர்ந்த 2 சமையல் கலைஞர்கள் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை தயாரித்து விருந்தினர்களுக்கு விருந்து படைத்தனர். இவ்விழாவில் சீனாவின் பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், இந்திய கலாச்சாரத் துறை செயலர் ரவீந்திர சிங் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெய்ஜிங், சாங்கிங், செங்டு, குவாங்சூ, ஹாங்சூ, ஹாங்காங், தலி, குன்மிங், ஷாங்காய், உரும்கி, லாசா மற்றும் குவிங்டாவ் ஆகிய 12 நகரங்களில் இந்திய கலாச்சார திருவிழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில், இந்தியாவின் பாரம்பரிய கலை, நவீன கலை மற்றும் கையெழுத்து, அறிவியல் சாதனைகள், புத்த மத பாரம்பரியம் தொடர்பான புகைப்படங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.
இந்தியாவில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கு இந்த திருவிழா முக்கியப் பங்கு வகிக்கும் என சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் சீனாவும் தங்களுடைய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியாவில் இதுபோன்ற விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.