

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட விவகாரத்தில் கருத்து தெரிவித்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், நிறவெறி கொடுமையானது என்று பதில் அளித்தார்.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்தார். இதில் ஃபிளாய்ட் உயிரிழந்தார். இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களைக் கிளப்பியுள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், அமெரிக்காவில் நடக்கும் போராட்டம் குறித்து நேர்காணல் ஒன்றில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் கூறும்போது, “ ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை மிகவும் கொடுமையானது. நிறவெறி என்பது கொடுமையானது” என்றார்.
மேலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தில் ட்ரம்ப்பின் அணுகுமுறை குறித்துக் கேட்டதற்கு, “அமெரிக்க அதிபர்களின் அரசியல் அணுகுமுறை சர்ச்சையான ஒன்று” என்று ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார்.