Published : 04 Jun 2020 07:22 PM
Last Updated : 04 Jun 2020 07:22 PM

போராட்டத்தில் சேதமடைந்த காந்தி சிலை: மன்னிப்பு கேட்ட அமெரிக்கா

அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில் வாஷிங்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதம் அடைந்ததற்காக அந்நாடு தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

கடந்த மே 25-ம் தேதி அன்று அமெரிக்காவில் மினியா போலீஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை, சந்தேக வழக்கில் அமெரிக்க காவல்துறை கைது செய்தது. அப்போது அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் ஃப்ளாய்டின் கழுத்தின் மீது தன் முழங்காலால் அழுத்தினார். மூச்சுவிடத் திணறிய ஃப்ளாய்ட் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆங்காங்கே கலவரங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இப்போராட்டத்தின்போது வாஷிங்டனில் வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும் உள்ளூர் காவல் துறையிலும் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென் ஜஸ்டர் கூறும்போது, “மகாத்மா சிலை சேதம் அடைந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் என்றும் பாகுபாட்டிற்கு எதிராகவே நிற்போம். விரைவில் சிலை சரிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சேதத்துக்கு உள்ளான காந்தி சிலை, 2000 ஆம் ஆண்டில் வாஜ்பாய் இந்தியப் பிரதமராக இருந்தபோது அவரது அமெரிக்கப் பயணத்தில் அப்போது அமெரிக்காவில் அதிபராக இருந்த பில் கிளிண்டன் முன்னிலையில் அர்ப்பணிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x