அமெரிக்க காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு கரோனா இருந்தது: மருத்துவ அறிக்கையில் தகவல்

அமெரிக்க காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு கரோனா இருந்தது: மருத்துவ அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி தாக்கியதில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஏப்ரல் மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று அவரது இறப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 25-ம் தேதி அன்று அமெரிக்காவில் மினியா போலீஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை, சந்தேக வழக்கில் அமெரிக்க காவல்துறை கைது செய்தது. அப்போது அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் ஃப்ளாய்டின் கழுத்தின் மீது தன் முழங்காலால் அழுத்தினார். மூச்சுவிடத் திணறிய ஃப்ளாய்ட் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆங்காங்கே கலவரங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் கரோனா தொற்றுக்கு உள்ளானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் இறந்ததற்கு கரோனா எந்த விதித்திலும் காரணமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், ''ஜார்ஜ் ஃப்ளாய்டின் உடலைப் பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவரது உடலில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தத் தொற்று இன்னும் அவருடைய உடலில் நீடித்திருந்தது. ஆனால், அவருடைய இறப்புக்கு கரோனா தொற்று எந்த விதத்திலும் காரணமாக அமையவில்லை'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நியூயார்க் நகரின் முன்னாள் மருத்துவப் பரிசோதகர் மிஷல் பாடென் கூறும்போது, ''அரசு அதிகாரிகள் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலைத் தெரிவிக்கவில்லை. இதனால் இறப்புக்குப் பிறகு அவர் உடலை பரிசோதனை செய்தவர்கள், அவர் உடலை எரியூட்டியவர்கள் என அவர் உடலைக் கையாண்டவ்ர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜார்ஜ் ஃப்ளாய்டைக் கைது செய்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற விஷயத்தில் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in