

வெள்ளை நிற வெறியை எதன் பொருட்டும் சகித்துக் கொள்ள முடியாது என்று ஜார்ஜ் ப்ளாய்ட் மரணம் குறித்து போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் வன்முறை நிகழ்வுகளை சுய அழிவு மற்றும் சுய தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 25 அன்று அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின நபரை, சந்தேக வழக்கில் கைது செய்தது. அப்போது அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் ஃப்ளாய்டின் கழுத்தின் மீது தன் முழங்காலால் அழுத்தினார். மூச்சுவிடத் திணறிய ஃப்ளாய்ட் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஆங்காங்க கலவரங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அந்நிகழ்வு குறித்து போப் பிரான்ஸிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஃப்ளாய்டின் மரணம் ஒரு துயரமான நிகழ்வு. அவருக்காக பிராத்திக்கிறேன். இனவெறி என்ற பாவச் செயலின் விளைவாகவே அவர் இறந்துள்ளார். நண்பர்களே நாம் இனவெறியை சகித்துக்கொள்ளக் கூடாது. பாரமுகம் காட்டக்கூடாது. அதே நேரத்தில் அந்நிகழவைத் தொடந்து வரும் வன்முறைச் செயல்கள் சுய அழிவு மற்றும் சுய தோல்வி என்பதையும் நாம் உணரவேண்டும்.
வன்முறையால் நாம் எதையும் அடையவில்லை. அதிகம் இழந்துதான் இருக்கிறோம். தற்போது நிகழ்ந்து வரும் வன்முறை மிகுந்த தொந்தரவைத் தருகிறது. அமெரிக்க மக்கள் தேசிய நல்லிணக்கம் ஏற்பட கடவுளை பிராத்திக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.