Published : 02 Jun 2020 07:48 PM
Last Updated : 02 Jun 2020 07:48 PM

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறப்பு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறப்பு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையின் தலைவர் ஜோசப் போரல் கூறியதாவது,

"அமெரிக்க மக்களைப் போலவே, ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைக் கண்டு நாங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அனைத்து சமூகங்களும் அதீத அதிகாரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் மிகுந்த துயர் அளிக்கிறது. அதிகார துஷ்பிரயோகத்தின் சாட்சியாக அந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. அனைத்து வகையான இன வெறியையும் நாங்கள் கண்டிக்கிறோம். அமெரிக்காவில் நிலவும் இனவெறியை அமெரிக்க மக்கள் ஒன்றினைத்து மாற்றியமைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எல்லா உயிர்களும் முக்கியம். கருப்பின மக்களின் உயிர்களும் முக்கியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மின்னிசோட்ட மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள கிளப் ஒன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு என்று கருப்பு இனத்தவர் கடந்த மே 25 அன்று மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள அங்காடியில் பொருள் வாங்கச் சென்றுள்ளார். அவர் வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்தியபோது அது கள்ள நோட்டாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அங்காடி ஊழியர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.

அதன் பெயரில் வந்த இரண்டு காவல் துறை அதிகாரிகள், ஜார்ஜ் ஃப்ளாய்டைக் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றபோது ஃப்ளாய்ட் கீழே விழுகிறார். அப்போது அந்த இடத்துக்கு வந்த மற்றொரு காவல் துறை அதிகாரியான டேவிட் சாவின் என்பவர் அந்த இரு போலீஸாருடன் இணைந்து மீண்டும் ஃப்ளாய்டை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயல்கிறார். அப்போதும் ஃப்ளாய்ட் கீழே விழ, அந்த இரு காவல் துறை அதிகாரிகள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தில் முழங்காலை வைத்து டேவிட் அழுத்துகிறார். ‘என்னால் மூச்சு விடமுடியவில்லை’ என்று ஃப்ளாய்டு கத்துகிறார். அந்தக் காவல் துறை அதிகாரி எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக்கொண்டிருந்த நிலையில் ப்ளாய்ட் உயிரிழக்கிறார்.

இந்தக் காட்சி வீடியோகவாக பதிவுசெய்யப்பட்ட நிலையில் சமூக ஊடகங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிலவும் இனவெறிக்கு எதிராக அங்குள்ள் மக்கள் திரண்டு போராடி வருகின்றனர். மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x